செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஏற்றுக்கொள்கிறோம்..

அன்பின் சக்திக்கு,
நல்லவர் யாரெனத்தெரியாமல் வாக்களிக்க யோசித்துக்கொண்டிருக்கும் வேளை.
சூரியப்புயலென எரிக்கும் சாலைகளில் வண்டியென இழுத்துப்போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை.
நட்சத்திரப்பந்தாட்டம் நாசமாய்ப்போனதற்கு
தமிழக மக்களை பொறுப்பாக்கி இருப்பதாய் வாசித்தேன்.
தலைநிமிர்ந்தே ஏற்றுக்கொள்ளலாம்.

எந்த மதத்திலும்,நாட்டிலும் இல்லாத அளவில் நம் நாடு கலை மட்டுமன்றி,கடவுளர்கள் கூட கலையோடு இணைந்தே இருக்கிறார்கள்.
நடனமாடும் நடராஜரும்,இசைக்கும் வாணியும்,துந்துபிக்கும் ஒரு கடவுளும் என வடித்திருக்கிறோம்.
ஒரு காவியத்தின் வில்லனான இராவணனும் இசையின் அரசனாகவே இயற்றப்பட்டிருக்கிறான்.
தாலாட்டில் தொடங்கி ஒப்பாரியில் முடியும் வரலாறு நமக்குண்டு.

நம் வரலாறுகளிலும் கலைகளை மதித்தவர்கள் நாம்.
கலைஞர்களையும்,நடிகர்களையும் நம்மைத்தவிர யாரும் இப்படி உயர்த்திப்பிடித்ததில்லை.
நடிகர்களும் சாதாரணமாய் இருந்ததில்லை.
தமிழக நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சுவாமி சங்கரதாஸ் அவர்களின் தொண்டு அளப்பறியது.
இந்திய சுதந்திரப்போராட்ட காலங்களில் பாஸ்கரதாஸின் பாடல்களில் வெள்ளைக்கொக்கை விரட்டியதை விடுத்து வரலாறு எழுத முடியாது.
முருகனாய் நடித்தாலும் சுதந்திரமயில் வேண்டிய விஸ்வநாத தாஸ் விடுத்த உயிர் கூட விடுதலைப்போராட்ட விதைதான்.
கொடுமுடி தந்த மகள் கே.பி.சுந்தராம்பாள் சாப்பிடும் தங்கத்தட்டை மகாத்மாவிடம் கொடுத்ததை காலம் மறக்காது.
ஈரோட்டுப் பெரியாரின் கருத்துக்களை பட்டிதொட்டியெங்கும் நாடகங்களில் பரப்பிய எம்.ஆர்.ராதாவும் சமூகப்போராளி தான்.
வரலாறு இன்னும் எத்தனையோ கலைஞர்களை பொதிந்து வைத்திருக்கிறது.
விடுதலைக்குப்பின் இந்தியாவின் போர் காலத்தில் சண்டை நடக்கும் இடத்துக்கே சென்று நிகழ்ச்சியின் மூலம் நிதியும்,சொந்த நகைகளையும் அள்ளித்தந்து நெகிழ வைத்தவர்கள் நம் கலைஞர்கள்.
கட்டபொம்மனும்,வ.உ.சி யுமாய் வாழ்ந்து காட்டியவர்கள் நமது நடிகர்கள்.
யார் இல்லையெனச்சொல்வது?

நன்றி மறந்தவர்கள் நாமல்ல.
எந்த நாட்டிலும் இல்லாத முறையில் கலைஞர்களின் கையில் செங்கோலை கொடுத்துவிட்டு அழகு பார்த்தவர்கள் நாம் தான். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்ததாய் ஒப்புக்கொண்டவர்களும் நீங்கள் தான்.

நடிகர்களின் கைகளில் ஆட்சியைக்கொடுத்துவிட்டதற்காய் வரலாறு கேலிசெய்தாலும் சுரணையற்றுப்போய்த்தான் இருந்தோம்.

காமராஜரும்,பக்தவச்சலமும்,குமாரசாமி ராஜாவும்,கக்கனும்,இராமையாவுமென ரத்தினங்கள் மின்னிக்கொண்டிருந்த தமிழக அரசியலை உங்கள் கரங்களில் கொடுத்ததை விடவா இன்னும் எதிர்பார்க்கின்றீர்கள் நீங்கள்?

எதை விதைக்கின்றீர்களோ..
அதையே அறுவடை செய்வீர்கள்.

இந்த நாட்டில் உங்கள் சங்கங்களை விட மிகப்பெரிய சங்கங்கள் இல்லாமையில் இருந்தாலும் மிக அமைதியாக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ரயில்வே ஊழியர் சங்கம்,காப்பீட்டு ஊழியர் சங்கம்,வங்கி ஊழியர் சங்கமென பல இருக்கிறது.
எனக்குத்தெரிந்து இந்த சங்கங்கள் தங்களுக்குள் உதவுவதை விட சமூகத்துக்கு உதவுவது அதிகம்.
சமீபத்தில் பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் கல்விச்செலவை காப்பீட்டு ஊழியர் சங்கம் ஏற்றிருக்கிறது.
நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதாய் சொல்வதை விட என்ன சாதித்துவிட்டீர்கள் சமூகத்துக்கு?

ஊடகங்களின் மூலம் உங்கள் தேர்தல் பரப்புரையை பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.
மக்கள் பிரச்சனையை அரசு பார்த்துக்கொள்ளும் என்றீர்கள்.
கணக்கு வழக்குகளுக்காய் நீதிமன்றம் சென்றீர்கள்.
அது உங்கள் பாடு.

இந்த நாட்டில் வருமான வரி பாக்கியில் நீங்களே அதிகமிருப்பதாய் செய்திகள் உண்டு.

எதற்காக இன்னும் மக்கள் பணம்?
திருடியும் பால் எடுத்து உங்கள் படமிட்ட அட்டைக்கு ஊற்றும் எங்களை இன்னும் ஏன்?
உங்களுக்கென கட்டடமும் ,நீச்சல் குளமும் வேண்டுமானால் எத்தனை நிகழ்ச்சி வேண்டுமானாலும் நடத்துங்கள்.
அழைக்கும் உங்களுக்கு இருக்கும் அதே உரிமை,உங்கள் நடிப்பை எடுத்துச்சொல்ல தமிழகத்துக்கும் இருக்கிறது.
தமிழகம் உங்கள் விளையாட்டு மைதானமாய்த்தான் எப்போதும் இருக்கவேண்டுமா?
எங்கள் இளைஞர் கூட்டம் இன்னுமா உங்கள் சிகை அலங்காரங்களில் சிக்கிக்கொண்டு சீரழிய வேண்டும்?

மைதானம் நிறையாததற்கு தமிழக மக்களே பொறுப்பாம்.

வாருங்கள் என் தமிழகமே, ஏற்றுக்கொள்வோம்.

ஆனால், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் அந்த மைதானம் போலவே அரங்கங்களும் காலியாகப்போகுமானால் அதற்கு தமிழகம் பொறுப்பல்ல.
உங்கள் வார்த்தைகளும்,நடத்தையும் தான்.

அன்புடன்,
செல்வக்குமார்.

7 கருத்துகள்:

  1. மிக அருமையாக அதே நேரத்தில் மிக நாகரிகமாக எழுதி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு
  3. செம பதிவு செல்வா....ஆம் தமிழகம் எப்படிப் பொறுப்பேற்கும்?!! அதுவும் இவர்களுக்கு ஆதரவாய் எதற்கு? தமிழக மக்களை வெள்ளம் சூழ்ந்த போது கை கொடுக்காதவர்களுக்கு...

    மிக மிக அருமையாய் தெளிவாய் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. நலிந்த மக்களுக்கு, அன்றாடம் அரைவயிற்றோடு அல்லாடும் அடித்தட்டு மக்களின் துயர் துடைக்காத ஒரு சங்கத்திற்கு கட்டடம் எதற்கு? தேவையெனில் ஒவ்வொரு நடிகரும் தாங்கள் வாங்கும் கோடிகளில் ஒரு சிறு தொகையில் கட்டிக் கொள்ளட்டுமே.

    பதிலளிநீக்கு
  5. சாட்டையடி ! சாட்டையடி ! சாட்டையடி !

    பதிவின் முதல் வார்த்தை தொடங்கி இறுதி வார்த்தைவரை அத்தனையும் உண்மை. சுயமரியாதையும் பகுத்தறிவும் உள்ள சொற்ப தமிழர்களின் மனங்களில் புழுங்கி கிடக்கும் வார்த்தைகள் !

    தமிழ்நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தியாய் பதியப்படவேண்டிய கட்டுரை.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு