செவ்வாய், 19 ஜனவரி, 2016

இதயத்தால் படியுங்கள்...

வாசிக்கும் முன்...
ஒரு சிறுகவிதை(?)யில் முடிந்த அந்த நூலின் விமர்சனம்..ஒரு உறுத்தலாகவே இருந்தது..
விரிவாய் சில உள்ளங்கள் கேட்டதாலும் ,உள்ளபடியே தேவையாய் இருந்ததாலும் முதன் முதலாய் ஒரு விமர்சனம்..
விமர்சனம் குறித்த உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்...

பொதுவாய் ஜெயகாந்தன் படைப்புக்கள் தலைப்பிலேயே வாசிக்கத்தூண்டிவிடும் என்பார்கள்.

ஒரு நல்ல படைப்பின் தலைப்பென்பதே"நெருக்கப்பட்ட உள்ளடக்கம்"தான்.

நாலுபேர் நின்றாலும், நாற்பதாயிரம் பேர் உட்கார்ந்திருந்தாலும்,தமிழ்க்கோடி யாவும் அலைவரிசையில் பார்த்துக்கொண்டிருந்தாலும் வார்த்தை வசீகரத்தில் கட்டிப்போடும் மாயவித்தைக்காரர்.

 

35ஆண்டுக்கால கால ஆசிரியப்பணி,  தமிழகம் தாண்டி உலகமெல்லாம் தமிழுலாச்சென்று வாங்கிவந்த அனுபவங்களோடு, தான் வாசித்த ,யோசித்த சிந்தனைகளை பதினாறு அத்தியாயங்களில் பந்திவைத்துச்சென்றிருக்கிறார். 

வாசித்த நமக்குத்தான் மூடிவைக்க மனமில்லை.

 

எப்படியோ மூடியபின் எண்ணப்பறவை சிறகடித்துப்பறக்கிறது.

சில திரைப்படங்கள் தொடக்கத்தில் பெயர் போடும்போதே அலுக்கத்தொடங்கிவிடும்.

சில புத்தகங்களின் முன்னுரையும் அப்படி அமைந்துவிடுவதுண்டு.

உச்சநடிகரின் பெயர்வரும்போது அரங்கம் அதிரும் உற்சாக விசில் போல.. ஆட்டம் தொடங்கிவிடுகிறது முகவுரைகளில்..

மக்களின் படைப்பாளிகள் ச.தமிழ்ச்செல்வன்,மதுக்கூர் இராமலிங்கம் என
இருவர்.

தமிழோடே வாழும்
முனைவர்.பா.மதிவாணன்,செந்தலை.ந.கவுதமன் என  இருவராய் ஒரு தமிழ்நலக்கூட்டணி(?).

 

நூலின் ஆசிரியர் படைப்புகளையும் தாண்டி நேர்த்திகளுக்கு நேர்ந்து விடப்பட்டவர்.

ஒரு ஒற்றுப்புள்ளி எங்கேனும் குறையுமானால் முகம் சுருக்கி,உறக்கம் விலக்கி அந்தப் புள்ளிப்பொட்டை வைத்தால் தான் உறக்கம் வரும் அளவுக்கு வார்த்தைகளின் உளவாளி.

 

ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுத வந்துவிட்டு ஏதேதோ எழுதுவதால் நான் நுனிப்புல் மேய்ந்தவனாய் நினைத்து கடந்துபோகாதீர்கள்..அத்தியாயம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியத்தின் அல்லது பெரும் படைப்புக்கான வீரிய விதைகளின் கூட்டமாக இருக்கும் போது..

விதைநெல்லுக்கு நான் என்ன விலைவைத்துக்கூவ..?

 

வாசிப்பை மறந்துபோன ஒரு பாதிக்கூட்டத்திற்கு இந்த புத்தகத்தை வாசிக்கும் வரமளித்து பாவம் தீர்க்கலாம். 

என்னை உங்கள் பக்கங்கள் அனுமதிக்குமானால் ஒவ்வோரு அத்தியாயத்திற்கும் தனியே ஒரு புத்தகம் கேட்பேன்...

 

பெண்ணில் தொடங்கும் அத்தியாயங்களின் பிறப்பு உங்களுக்கும் புரியும்...

அவ்வை தொடங்கி அ.வெண்ணிலா ஊடாக.. 

அவர்கள் கனவுகள் விரிந்த கவிதைத்தோட்டத்திற்கு கரங்கள் இழுத்து நடத்திப்போகிறார்.

 

சிரிக்கும் பெண்பூக்கள் , ஒருபுறம் எரிக்கும் அவர்கள் கவிதைகள்...என அனல் தெறிக்கும் அவர்களின் அந்தப்புரத்தில் ஒரு பெண்ணாக இருந்தால் தான் எளிதில் ஊடுருவ முடியும்..

ஆணாயிருக்கும் இவரால் எப்படி? 

அன்பென்னும் ஒளிகொண்டு.இவர் இருளைப் பகலாக்கும் நிலா...

அதனால் சாத்தியமாயிருக்கக்கூடும்.

 

ஆதிப் பொதுவுடமைச் சமுதாயம் முதல் இன்றும் நம் கனவுகளில் ஒளிரும் சமத்துவச் சமுதாயம் வரை இவர் எழுதத்துணிந்த ஈடில்லாப் பெரும்பணியின் சிறு துண்டொன்றை சுவைக்கக்கொடுக்கிறார்..அத்தனை இனிப்பு..
பாரதி பின்தள்ளப்பட்ட போட்டி தெரியுமா உங்களுக்கு,

சரி ..

இரண்டாம் இடம் பிடித்த பாட்டு தெரியுமா?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே"

விந்தை ..அத்தோடில்லை. 

முதல் பரிசுபெற்ற பெரும்புலவர் யார்?
செந்தமிழ் நாட்டை தோகடித்த வரிகள் யாது?
மறுக்கப்பட்ட மகா(?) உண்மை என்ன?
பதறித்தெரிக்கிறது உண்மையின் பரல்கள்.

செம்மொழி மாநாடு போன யாரேனும் அங்கு கம்பனைக்கண்டீர்களா?
இவர் பார்த்திருக்கிறார்.

மேலாண்மையின் கொலை என்றொரு கதையை  இவரின் விமர்சனக்கண்ணாடி பரிசோதனை செய்கிறது. இவரின் சோதனைக்கூடத்தில் எத்தனைக்கருவிகள்..?பாரதி,வ.வெ.சு, வீரமாமுனிவர்,வல்லிக்கண்ணன்,சி.சு.செல்லப்பா..அப்பப்பா...ஒரு கதைக்கு எத்தனை கதைகள்..?

வார்த்தைகளின் வீரியம் மட்டும் எழுத்துக்கும் பேச்சுக்கும் போதுமெனில் இங்கே ராசிபலன் எழுதுவோரும்,லேகியம் விற்போரும் பலபட்டம் பெற்றிருப்பார். 

இலைகளுக்கு மருந்தடிக்காமல் வேர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இவர் எல்லாப்பட்டங்களும் பெறும் நாள் தூரமில்லை.

 

க.நா.சு வின் விமர்சனக்கூடத்துள் நுழைகிறார்... வேண்டியது கிடைக்காமல் , சிக்கியஎழுத்துக்களை பிரித்தெடுக்கிறார்.
ஆங்கிலக்கண்ணாடி கொண்டு அவர் தீட்டிய தமிழ் வசைகளுக்கு
மருந்து போடுகிறார்..

 

ஜெயகாந்தன் சபைக்குள்ளும் புகையாய் படர்கிறார்.

அந்த ராஜசபையில் அவரின் பாத்திரங்களுடனே ஒரு ஆனந்த நர்த்தனம் ஆடித்தீர்க்கிறார்..
ஒரு சிங்கத்தின் பிடறியில் விரல்கள் கொண்டு நீவி அதன் பரிணாமம் சொல்கிறார் நம் காதோடு..
சித்தாளில் தொடங்கிய உற்சவ வேள்வி ஜெயஜெய சங்கராவாய் முடியும் ஹோம வரலாறு வாசிக்க மட்டுமல்ல..

அவரின் சபை தாண்டியும் ஆடவேண்டிய ஆட்டம் தான்...

ஏனோ,அடக்கம் அமரருள் உய்த்திருக்கிறது.

 எனக்கொரு ஆசை..
இவர் ஆங்காங்கே அள்ளித்தெளித்திருக்கும் கவிதைகள் பொறுக்கி ஒரு நூலில் கட்டினால் ஆகச்சிறந்த ஒரு கவிதாமாலை கிடைக்கும்.

 எல்லாம் இருக்கும் திருக்குறளில் தமிழ் இல்லை, தமிழ்நாடும் இல்லை..

திடுக்கிடும் திரைக்கதைக்கு சற்றும் குறைவில்லை.. இவர் விரல் கொடுத்த குரலின் வினாக்கள்.

கண்ணதாசன் தோளோடு கைபோட்டு கவிதைகள் பேசி நடக்கிறார்.

உணர்ச்சிக்கவிதைகளில் வரும் மயிருக்கும் மரியாதை செய்கிறார்.
ஆகாசம் விரியும் பார்வையின் கார்வைகள் பேராசான் ஜீவாவின் வார்த்தைகளையும் பேசவைக்கிறது.

தமிழென்னும் அணையில்லாப்பெருநதி இணையவெளிகளில் பாய்ந்தோட ஒரு கால்வாய் எடுக்கிறார்..

விரியும் வலைப்பூக்களில் வீசப்போகும் வாசத்திற்காய்  தவமியற்றி சொல்லும் ஒரு வரி போதும்...

" மெல்லத்தமிழினி வாழும்"

புத்தகக்கோட்டையின் கொத்தளம் யாவிலும்
தலைப்புக்கொடிகள் செம்மாந்து பறக்கின்றன..

"காலத்தை மீறிய கவிதைகள்"

"திருக்குறளில் பாடபேதம்"

"மரபுக்கவிதை எனும் மகாநதி வற்றிவிட்டதா?"

"காலங்களில் அவன் வசந்தம்"

"கம்பனும் கார்ல்மார்க்சும்"

பதினாறு கொடிகள்
பட்டொளிவீசிப்பறக்கும் போது..

தற்குறிப்பேற்ற அணி கண்களில் விரிகிறது.

சரி..சரி.. எல்லாமே நான் சொல்லிவிட்டால் நீங்கள் என்ன படிக்கப்போகின்றீர்கள்?

உங்கள் வாழ்க்கைப்புத்தகம் வாசித்துத்தீரும் முன் இந்தப்புத்தகத்தை வாசித்துவிடுங்கள்.

 யாரெல்லாம் வாசிக்கலாம்?

எழுத்துக்கூட்டி வாசிப்பவர் தொடங்கி

தமிழ் எழுத்து புரியும் எல்லாரும் வாசிக்கலாம்..

 தகுதியறிந்து பரிசில் அறிவித்த திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்திற்கு நாமும் வாழ்த்துச் சொல்லலாம்!

விமர்சனத்தை இப்படி முடிக்கலாமா..?

நூலின் ஒரு பகுதியாய் கமபனையும்,கார்ல் மார்க்ஸ்சையும் ஒரு கோட்டில் நிறுத்துகிறார்.

வதம் முடிந்து பதவியேற்ற ராமன் அனுமனை.  தழுவிக்கொள் என்றதும்...  எழுதி முடித்த மார்க்ஸ் தன் நண்பன் ஏங்கல்ஸை.. என்னைத்தழுவிக்கொள் என்றதும்,,

அந்த நேர்கோட்டில் மிக நெருக்கமாய் நிகழும் அதிசயங்கள்..

 

நான் ஒன்று சொல்வேன்..

அய்யா..

இன்னும் எழுதுங்கள்..

நானும் தழுவ வேண்டும்.

 - மீரா.செல்வக்குமார்


நூல் – “கம்பன் தமிழும் கணினித்தமிழும்”

ஆசிரியர் -நா.முத்துநிலவன்

வெளியீடு, அகரம் தஞ்சை.

தொலைபேசி – 04362 -239289

பக்கம்-216, விலை ரூ.150

15 கருத்துகள்:

  1. அசத்தலாய் ஒரு நூல்விமர்சனம் படைத்து உங்களின் இன்னொரு பரிணாமத்தை வெற்றிகரமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.
    தொடர்ந்து எழுதுங்கள். நிலவன் ஐயா மீதான பிரமிப்பு அதிகமாகிறது.ஐயாவுக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வித்தியாசமான விமர்சனம். அருமை! கவிதை மட்டுமல்ல, கடிதம் மட்டுமல்ல... விமர்சனம் எழுதுவதிலும் முத்திரை படைத்துவிட்டீர்கள்! வாழ்த்துகள்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள்
      பின்னூட்டங்களில்
      நான்
      இரையெடுக்கிறேன்...

      இதயத்தால்
      வாழ்த்தும்
      உங்களை
      என்ன
      சொல்லி
      வணங்க..
      இறை
      எனச்சொல்லாமல்...

      நன்றி..



      நீக்கு
    2. உங்கள் செய்தி பார்த்து வியந்தேன்/தோம் செல்வா. நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் உண்மையாகவே வாசித்து உணர்ந்ததைத்தான் இடுவதுண்டு.
      உங்கள் இந்த பதில் வார்த்தைகளை வாசிக்கும் போது மிகவும் மனம் மகிழ்ந்தாலும்...இத்தனை உயரிய பெரிய வார்த்தைகள் எங்களுக்குப் பொருந்துமா என்பது மிகவும் ஐயப்பாடே. வலையுலகில் எழுத்தில் பலர் அழகுற எழுதி தங்கள் எழுத்தாளுமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தில், அத்தனைக்கு நாங்கள் வல்லவர்களும் அல்ல எழுத்தில். எங்கள் உணர்வுகள்தான் வெளியாகின்றன. பெரிய வார்த்தைகல் வேண்டாம் உங்கள் அன்பே போதும் செல்வா.

      மிக்க மகிழ்ச்சி நீங்கள் எங்களிடம் இத்தனை மதிப்பு வைத்திருப்பதற்கு. எங்கள் பொறுப்பும் கூடுகின்றதே! சகோ..

      கூடவே ஒன்றையும் சொல்லிக் கொள்கின்றோம் நிஷா - ஆல்ப்ஸ் தென்றலில் நட்பு/காதல் பற்றிய உங்கள் கவிதை அருமை! எங்கள் கருத்தும் அதுவே!!!! ரசித்தோம் ரசிக்கின்றோம் ரசிப்போம் செல்வா...வாழ்த்துகள்! தொடருங்கள்..

      நீக்கு
  3. பிரித்து மேய்ந்து விட்டீர்கள்... அட்டகாசமான விமர்சனம்...!

    பதிலளிநீக்கு
  4. ஆகா
    அருமை நண்பரே
    தங்களின் விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன்
    நண்பரே

    பதிலளிநீக்கு
  5. அருமையான விமர்சனம் அய்யா! நூலின் அனைத்து அம்சங்களையும் அட்டகாசமாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.சிலநேரங்களில் தொடர்ந்து வாசிக்கமுடியா மனநிலை..
      ஆனாலும் என்னுடைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டம் வரும்போது..நான் புரிந்துகொள்கிறேன்...அட..நம்மை இவர் கவனிக்கிறார் என...நன்றிகள்..

      நீக்கு
  6. நான் ஒன்று சொல்வேன் சார்! உங்கள் எழுத்துக்கள அதிகமாக படித்ததில்லை. கவிதைகள் சில படிக்கும் வாய்ப்பு என் தளத்தின் மூலம் தொடர்தலில் கிடைத்தது.
    தாங்கள் என் தளத்திலும் வருகை தந்து பின்னூட்டமிடுவதற்கு நன்றிசார்.

    அருமையான புத்தக விமர்சனம் நல்ல எழுத்தாற்றல் வரம் வாய்க்கப்பெற்றவர் சார் நீங்கள்! விமர்சனம் படித்த பின் நூலை கட்டாயம் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் வருகின்றது.அந்த ஆர்வத்தினை தூண்டுதல் தான் இந்த பதிவின் வெற்றி.

    இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.
    நிரம்ப எழுதுங்கள்.
    படிக்க காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவுகள் பலதும் மகள்கள் ஓடி விளையாடு பாப்பா, சின்னவள் தளமும் சென்று படித்தேன். பிள்ளைகளின் எழுத்தாற்றலில் வேகம், திறன் , சிந்தனை கண்டு ஆச்சரிப்பட்டேன். எதிர்காலத்தில் அனைத்திலும் சிறந்து பெற்றோருக்கும் உற்றோருக்கும் பெயர் தரும் மக்களாக என் நல்லாசிகள் சார்.

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் அருமை நண்பர் எனக்கும் கிடைத்தால் படிக்க வேண்டும் போல்
    ஆசை ஆசையாய் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  9. அருமையான நூல் விமர்சனம் ஐயா..வருகிற 23 ஜனவரி எங்கள் கல்லூரியின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அவரை அழைத்துள்ளனர் ஐயா.நான் அவரை பற்றிய சிறுக் குறிப்பு தரவுள்ளேன் ஐயா..

    வாழ்த்துக்கள் நூல் விமர்சனம் தொடர்க..

    பதிலளிநீக்கு
  10. அருமையான அலசல்
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
  11. முத்து நிலவன் அவர்களின் படைப்பு பலாச் சுளை என்றால் உங்களின் விமர்சனம் அதற்கு தேன் ஊற்றி ஊற வைத்தது போலிருக்கிறது. வார்த்தைகளுக்கென்று வங்கி ஏதும் வைத்திருக்கிறீர்களா? அழகிய தமிழில் கவி நடையில் தமிழ் மழை பொழிந்திருக்கிறீர்கள். சுவையான நடையில் அழகிய விமர்சனம்.

    பதிலளிநீக்கு