சனி, 26 செப்டம்பர், 2015

மனுசப்பயலே....

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்...இரண்டு கைபேசி வைத்திருக்கின்றீர்களா...ATM இயந்திரத்தில் பணமெடுத்துவிட்டு அதற்கான ரசீதை கசக்கிப்போட்டு விடுகின்றீர்களா...புகைக்கின்றீர்களா...



நடக்கும் போது ஒரு மரத்தின் அல்லது செடியின் இலைகளை கிள்ளி எறிந்து விடுகின்றீர்களா....கொஞ்சம் பொறுங்கள்...இன்னும் இருக்கிறது....இவற்றில் ஏதேனும் ஒன்றைச்செய்தாலும் நாம் பூவுலகின் எதிரிகள் தான்...
எப்போது வேப்பமரத்து நிழலைதவிர்த்து குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் அடைந்தோமோ..அப்போதே கொள்ளிவைக்கத்தொடங்கிவிட்டோம் பூமிக்கு....
மரமாய் நின்றான் என மனிதனை மரத்திற்கு ஒப்பிடாதீர்கள்...ஒரு மனிதன் நாளொன்றுக்கு மூன்று சிலிண்டர் ஆக்ஸிஜன் சுவாசிக்கிறானாம்....அப்படியெனில் வருடத்திற்கு 766000 ரூபாயும்.சராசரி வாழ்நாள் 65வருடங்களெனில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றை காலி செய்கிறான்.....ஒரு மரம் அத்தனை காற்றை உற்பத்தி செய்கிறது.ஒரு மரத்தின் நிழல் அந்த இடத்தின் வெட்பநிலையயை 20% குறைக்கிறது.அது வருடத்தில் 2.6 டன் கார்பன்- டை- ஆக்சைடை உறிஞ்சுகிறது.....இவ்வளவு ஏன் ஒரு மூங்கில் மரத்தின் குத்து ஒரு மனிதன் சுவாசிப்பதைக்காட்டிலும் அதிகமாய் ஆக்ஸிஜன் தருகிறதாம்....
இமயமலை வளரும் ரகசியம் மனிதர்கள் விட்டுவரும் குப்பைகளாலும் இருக்கலாம்.
விளையாட்டாய்த்தோன்றும்...
கைப்பிடி அளவு காற்றைச் சோதித்தால் எத்தனை அலைவரிசைகள் கிடைக்கும்...அடப்பாவமே அப்படியெனில் இழுக்கும் மூச்சும் அலைவரிசைக்குப்பைகளா?
வெளியூர் அக்காக்கள் மணமுடித்து உள்ளூர் வரும் போது சீதனச்சாமான்களில் ஒரு பூஜைக்கூடை இருக்கும்.
ஒற்றைத்தேங்காய்,ஊதுபத்தி,கதம்பம் என தொடங்கும் ஆலயப்பிரவேசம்,அரைமூடித்தேங்காய்,இரண்டு வாழைப்பழம் என முடியும் காட்சிகள் இன்னும் கண்களில் இருக்கிறது.
கடந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் அம்மனுக்கு ஓவர் டைம் வேலை....நம்புங்கள் ஒருவர் கையிலும் பூஜைக்கூடை இல்லை.கைகளை வீசிக்கொண்டு வந்தார்கள்..பாக்கெட் பால் வாங்கினார்கள்.பிளாஸ்டிக் பைகளில் பூஜை சாமான்கள்.
LED வெளிச்சத்தில் அம்மன் கொழுப்பு எடுக்கப்பட்ட பாலில் குளித்தார்....பாதித்தேங்காய்க் கவர்களுடன் திரும்பினர் பக்தகோடிகள்...
நாகரீகம் இதுதானென்றால் நாசமாய்த்தான் ஆகும் நாடும்...பூமியும்.
விஞ்ஞானத்திற்கும்,விவசாயத்திற்கும் விடிவெள்ளியாய் இருந்த நாட்டில் தான் சிறு தானியக்கண்காட்சி நடத்தவேண்டியிருக்கிறது.
நிலத்துக்கு ஒரு பெயர்,ஒரு விலங்கு,ஒரு கடவுள்,ஒரு மரம் எனக்கொண்டாடிய தமிழன் தான் கருவேலம் மரம் வளர்த்துப்பிழைக்கிறான்.
பனங் கற்கண்டுக்கும்,கருப்பட்டிக்கும் செய்த பாதகம் தான் சர்க்கரை நோய்த்தண்டனை.
தோட்டத்தை அழித்து வீடுகட்டி இயற்கை காட்சிகளை அச்சிட்டு ஒட்டி அழகு பார்க்கும் அவலம்.
சிட்டுக்குருவிகள் பறந்தவெளிகளில் தொலைபேசிக்கோபுரம் நட்டோம்...சிட்டுக்குருவிகளைத்தின்றுவிட்டு,,மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கிறது இரும்பு கழுமரமாய்.
பூமியை மலடாக்கும் பிளாஸ்டிக்.காற்றை மலடாக்கும் அலைவரிசைக்குப்பைகள்.ஆகாசத்தை அவதிப்படுத்தும் அடுத்தடுத்த சோதனைகள்.
பூமிக்கு வாயிருந்தால் இப்படித்தான் பாடும்.
'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி'.
காதைக்கொடுங்கள் ஒரு யோசனை.கவிதைப்புத்தகங்கள் அச்சிடுவதை அரசு தடை செய்யுமெனில் பல வனங்கள் காகிதங்களாகாமல் காக்கப்படலாம்.
அடுக்குமாடி வீடாய் இருந்தாலும் ஒரு செடியேனும் வளருங்கள்.
எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காதீர்கள்..பாவம் அதற்கு பல வேலைகள்..டெங்கு வந்தால் தான் அது நிலவேம்பு சாயம் காய்ச்சும்.மருத்துவமனைகளில் பதிவு அதிகமானால் தான் சுகாதாரத்தைப்பற்றி வாய் கிழியாமல் பேசும்.
எங்க அப்பத்தா சொல்லும்.' ' தலைவலி வந்தால் பத்தும்,காய்ச்சல் வந்தால் ஊசியும் நமக்குத்தான் போடனும்'
வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக்காணவில்லை என்று அலறித்துடிப்பார்...அரங்கம் முழுவதும்  அப்படி ஒரு ஆரவாரம்.அட மனுசப்பயலே...அவர் காசை வாங்கிக்கொண்டு அழுவதற்கு சிரிக்கின்றாயே..
இங்கே கண்முன்னால் எத்தனை ஏரிகள்,குளங்கள் காணாமல் போய்விட்டன.
ஒன்று வீடுகட்டிக்கொண்டார்கள்...அல்லது கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.
ஆற்றின் நிலையோ அதைவிட கேவலம்..
அடிமடியைச் சுரண்டி..அழ அழ மண்ணெடுத்து மலடியாக்கிவிட்டார்கள்.ஆற்று மண் சுமந்து செல்லும் லாரியில் ஒழுகும் நீர் பார்த்து என் கவிஞன் சொன்னான்
'வடிவது
தண்ணீரல்ல
ஆற்றின் கண்ணீர்'.
கல்வி ஒரு மனிதனை மட்டுமல்ல,நாட்டை மட்டுமல்ல.இந்த உலகத்தையே மாற்றிக்காட்டும் வல்லமை மிக்கது.
அறியாமை அகழ்வதே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முதல் படி.
ரொம்பவே எளிதானதுங்க சுற்றுச்சூழல் பேணுவது...
1)பிளாஸ்டிக் கூடுமானவரைத் தவிர்ப்பது.
2)பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்தல்.
3)மரம் வளர்த்தல்
4)இயற்கையை நேசித்தல்.
5)மனிதனாய் இருத்தல்..
அவ்வளவு தாங்க...
பூமியைக்காக்கலாம் வாங்க....

6 கருத்துகள்:

  1. அழகான நடை..ஆழமான கருத்துகள்..
    பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  2. சிட்டுக்குருவிகள் பறந்தவெளிகளில் தொலைபேசிக்கோபுரம் நட்டோம்...சிட்டுக்குருவிகளைத்தின்றுவிட்டு,,மனிதர்களையும் கொல்ல ஆரம்பித்திருக்கிறது இரும்பு கழுமரமாய்.
    சூப்பர்.....வெற்றி பெற வாழ்த்துகள்..ஆமா சுற்று சூழல் வகையில் போடாமல் பெண்ணியத்தில் இணைத்துள்ளீர்களே...சரி செய்யவும்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை. ஆனால் வகை மாறி வந்தது போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான நடையில் அழகான விழிப்புணர்வுப் பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு